கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்டு அடமானம் வைத்தவர்களின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக நகைக் கடன் பெற்றவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இதற்காக, கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களைச் சேகரித்து தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் போலி நகைகள் வைத்தும் முறைகேடாக நகைக்கடன் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகளைப் பயனாளிகளுக்குத் திருப்பி அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அதனடிப்படையில், 12 லட்சத்து 55 ஆயிரத்து 233 பயனாளிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கு உட்பட்ட நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100% நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.