டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜா ராணி, கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மகளிருக்கான வில்வித்தையில் தீபிகா குமாரி 3-வது சுற்றில் நுழைந்தார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக்திருவிழாவின் 6-வது நாளான நேற்று, மகளிருக்கான மிடில்வெயிட் குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜாரா ராணி 5-0 என்றகணக்கில் அல்ஜீரியாவின் இக்ராக்சைபை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் வெற்றி பெறும்பட்சத்தில் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதிப்படுத்துவார் பூஜா ராணி.
ஆடவருக்கான வில்வித்தை ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தருண்தீப் ராய் தனது முதல் ஆட்டத்தில் 6-4 என்ற கணக்கில் உக்ரைனின் ஒலெக்ஸி ஹன்பினை வீழ்த்தினார். ஆனால் 2-வது ஆட்டத்தில் ஸ்ரேலின் இட்டே ஷானியிடம்5-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார் தருண்தீப் ராய். இதேபோன்று மற்றொரு இந்திய வீரரான பிரவீண் ஜாதவும் முதல் ஆட்டத்தில் வெற்றிகண்ட நிலையில் 2-வது ஆட்டத்தில் 0-6 என்ற கணக்கில் முதல் நிலை வீரரான அமெரிக்காவின் பிராடி எலிசனிடம் தோல்வி கண்டார்.
மகளிர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி முதல் சுற்றில் 6-0என்ற கணக்கில் பூட்டானின் கர்மாவை வீழ்த்தினார். தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் 6-4 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஜெனிபர் முசினோ-பெர்னாண்டஸை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பாட்மிண்டனில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-9, 21-16 என்ற நேர்செட்டில் ஹாங் ஹாங்கின் சியுங்கைவீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார். நாக் அவுட் சுற்றில் சிந்துடென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை சந்திக்கிறார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாய் பிரணீத் தனது 2-வது சுற்றில் 14-21, 14-21 என்ற நேர் செட்டில் நெதர்லாந்தின் மார்க் கால்ஜோவிடம் வீழ்ந்தார். முதல் ஆட்டத்திலும் சாய் பிரணீத் தோல்வி அடைந்திருந்ததால் அவரது ஒலிம்பிக் பயணம் முடிவுக்கு வந்தது.
மகளிர் ஹாக்கியில் இந்தியஅணி 1-4 என்ற கோல் கணக்கில்நடப்பு சாம்பியனான இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இந்தியஅணிக்கு இது ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது. இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஆடவருக்கான படகு வலித்தலில் டபுள்ஸ் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜாட், அர்விந்த் சிங் ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரை இறுதியில் இந்திய ஜோடி 6-வது இடம் பிடித்தது.