ஓசூர்: உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் ஓசூரில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனையானது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் வெயில் மற்றும் நோய் தாக்கம் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டது. இதேபோல, வெளி மாநிலங்களிலும் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டதால், ஓசூர் சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளிமாநில தக்காளி வரத்து குறைந்தது. இதேநிலை தமிழகம் முழுவதும் இருந்தது.

இதனால், தக்களியின் விலை படிப்படியாக உயர்ந்தது. உழவர் சந்தைகளில் கிலோ ரூ.150 வரையும், வெளி மார்க்கெட்டில் வரலாறு காணாத வகையில் ரூ.180 முதல் 200 வரை தமிழகம் முழுவதும் விற்பனையானது. இதனால், நடுத்தர மக்கள் சமையலுக்குத் தக்காளியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனிடையே, தக்காளி சாகுபடி பரப்பை அதிகரிக்க ஓசூர் பகுதி விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத் துறை மூலம் இலவச நாற்றுகள் வழங்கப்பட்டன. மேலும், தக்காளி விலை உயர்வால் ஓசூர் மற்றும் கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களில் விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஆர்வம் காட்டினர்.

தற்போது, தக்காளி விளைச்சல் தொடங்கி அறுவடை நடப்பதால், ஓசூர் சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளி மாநில தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஓசூர் உழவர் சந்தையில் நேற்று முன்தினம் தக்காளி கிலோ ரூ.60 முதல் 75-க்கு வரை விற்பனையான நிலையில், நேற்று காலை ரூ.30 முதல் ரூ.45 வரை விற்பனையானது.

இதே போல சில்லறை விற்பனையில் ரூ.80-க்கு விற்பனை செய்த தக்காளி ரூ.50-க்கும் சில இடங்களில் விவசாயிகள் வாகனங்களில் 2 கிலோ தக்காளி ரூ.50-க்கும் விற்பனை செய்தனர். கடந்த காலங்களைப் போலத் தக்காளி விலை குறைந்திருப்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.