முதல்வரின் தனிச் செயலாளர்கள் கவனிக்கும் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் 4 தனிச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதன்படி முதல்வரின் முதன்மைச் செயலாளராக உதயச் சந்திரன் ஐஏஎஸ், 2-வது தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ், 3-வது தனிச் செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 4-வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் கவனிக்கும் துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில், 4-வது தனிச்செயலாளராக இருந்த அனு ஜார்ஜ்க்கு ஒதுக்கப்பட்டிருந்த துறைகள் அனைத்தும் மற்ற 3 தனிச் செயலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஏற்கெனவே கவனித்து வந்த 11 துறைகளுடன் சுற்றுச்சூழல், இளைஞர் நலன், சுற்றுலா ஆகிய துறைகள் கூடுதலாக கவனிப்பார்.
2-வது தனிச் செயலாளர் உமாநாத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, குறு, சிறு, நடுத்தரத் தொழில், ஆதிதிராவிடர், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை துறைகளும், 3-வது தனிச்செயலாளரான சண்முகத்திற்கு கால்நடை மற்றும் மீன்வளத் துறை, கைத்தறி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதல்வரின் நிகழ்வுகளை திட்டமிடுதல் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.