நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்கான தேதி அடுத்த சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வேட்பாளர் தேர்வில் மும்முரமாக உள்ளன. மேலும், கூட்டணி கட்சிகளிடம் தேவையான இடங்களை பெறுவதற்கான பேச்சுவார்த்தையும் விரைவில் தொடங்கவுள்ளன.
ஏற்கெனவே தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது. தேர்தல் நடந்த 74 ஊராட்சி ஒன்றியங்களில் 73 இடங்களும், 140 மாவட்ட ஊராட்சிகளில் 138- இடங்களும் திமுக கூட்டணிக்கு கிடைத்தன.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக கட்சியினரிம் விருப்பு மனுக்களை பெற்றது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறும்போது, ‘‘தமிழகத்தில் அடுத்தகட்டமாக நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தேவையான இடங்களை கேட்டு பெற விரைவில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்தேதி அறிவித்தவுடன் திமுகவுடன் பேச்சவார்த்தை நடத்தி எங்களுக்கான இடங்களை கேட்டு பெறுவோம். அதற்கு முன்பு காங்கிரஸ் மாவட்ட தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளையும் கேட்போம்’’ என்றார்.