தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைமுழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கர்நாடகாவில் ஞாயிறுஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த வாகனங்களை ஓசூர் எல்லையில் போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கடந்த 9-ம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் அமலில் இருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நேற்று அதிகாலை முதலே தமிழகத்துக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இடைவெளியின்றி வந்தபடி இருந்தன. தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்ததால், ஓசூர் அருகே தமிழக எல்லையில் உள்ள கரோனா தடுப்பு சோதனைச் சாவடியில் கிருஷ்ணகிரி எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் ஓசூர் ஏஎஸ்பி அரவிந்த் மேற்பார்வையில் தலா ஒரு பெண் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிரவாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது, மருத்துவச் சிகிச்சை தொடர்பான வாகனங்கள் மற்றும் அத்தியாவசியப் பணிகளுக்கு செல்லும் வாகனங்களில் வந்தவர்களிடம் உரிய ஆவணங்களை போலீஸார் சரிபார்த்த பின்னர் தமிழகத்துக்குள் அனுமதித்தனர். அந்த வாகனங்களில் ஓசூர் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், கர்நாடக மாநில அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட பிற வாகனங்கள் அனைத்தையும் எல்லையில் போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இரு மாநில பேருந்துகள் மற்றும் பயணிகளால் எப்போதும் பரபரப்பாக செயல்படும் ஓசூர் பேருந்து நிலையம் நேற்று முழு ஊரடங்கால் பேருந்துகள், பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், ஓசூர் பாகலூர் சாலை, மகாத்மா காந்திசாலை, நேதாஜி சாலை, வட்டாட்சியர் அலுவலக சாலை, ஏரித்தெரு, தேன்கனிக்கோட்டை சாலை உள்ளிட்ட பிரதானச் சாலைகளில் தடுப்புகள் அமைத்து 100-க்கும் மேற்பட்ட போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.