நாகர்கோவில்: பெண்களுடன் பாதிரியார் இருக்கும் வீடியோ வைரலான நிலையில், தலைமறைவாக இருந்த அவரை இன்று நாகர்கோவிலில் தனிப்படையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்ரோ (29). பாதிரியாரான இவர் அழகியமண்டபம் அருகே பிலாங்காலையில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றி வந்தார். இவர் தேவாலயத்திற்கு வரும் இளம்பெண்கள், மற்றும் கல்லூரி மாணவிகளிடம் நெருக்கமாக பேசி பழகி அவர்களுடன் வீடியோ சாட்டிங் செய்ததும், நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்ரோவால் பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
மேலும், பாதிரியாரின் லேப்டாப்பை கைப்பற்றிய சைபர் கிரைம் போலீஸார் ஆய்வு செய்தபோது அதில், 75-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் அவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் இருந்தன. பல போட்டோக்களும், வீடியோக்களும் அழிக்கப்பட்டிருந்தன. அவற்றையும் கைப்பற்றும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். மேலும், பாதிரியாரை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தன. இதனால், அவரது செல்போன் சிக்னல் மூலம் இன்று காலையில் இருந்து போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் உள்ள வீட்டில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீஸார் அங்கு சென்று பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்தனர்.
பின்னர் எஸ்.பி. அலுவலகத்தில் சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். அவருக்கு உடந்தையாக இருந்து உதவி செய்தவர்கள் குறித்த விவரமும் பெறப்பட்டது. தொடர்ந்து பாதிரியாரிடம் விசாரணை நடந்து வருகிறது.