நாட்டின் புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் ஜூன் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜுன் 29ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.

குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதில் மத்தியில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தற்போது தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. குறிப்பாக , மத்தியில் ஆளும் பாஜக வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டன. பிரிவினை சக்திகளை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட, அதற்காக பொது வேட்பாளர் ஒருவரை நாம் நிறுத்த வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 கட்சிகளுக்கு  மம்தா கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார்.

கடந்த 15ஆம் தேதி மம்தா பானர்ஜி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் 17 எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சரத் பவாரை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பொது வேட்பாளராக முன்னிறுத்த மம்தா விரும்பினார். ஆனால், இதற்கு சரத் பவார் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா ஆகியோரை நிறுத்த மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்தார். மம்தாவின் விருப்பத்திற்கு இருவருமே மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளார் என தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக யஷ்வந்த் சின்ஹா வெளியிட்ட ட்வீட்டே இந்த புதிய திருப்பத்திற்கு காரணம். இவர் தனது ட்விட்டர் பதிவில், ‘திரிணாமூல் கட்சியின் மிக மதிப்பு மிக்க பதவி கொடுத்து என்னை கவுரப்படுத்திய மம்தா பானர்ஜிக்கு நன்றி. மிகப் பெரிய தேசப் பணிக்கான நான் கட்சி பணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக பணியாற்ற உள்ளேன். இந்த முடிவை மம்தா ஏற்பார் என நம்புகிறேன்’ என்றுள்ளார். இதையடுத்து இவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளாரக களமிறங்குகிறார் எனக் கூறப்படுகிறது.

பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர். மோடி பிரதமரான பின் பாஜக தலைமையின் மீது இவருக்கு மெல்ல அதிருப்தி ஏற்பட்டுவந்த சூழலில் 2018ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகினார்.2021ஆம் ஆண்டு மம்தாவின் திரிணாமூல் கட்சியில் சேர்ந்த அவருக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.