பெரியாரின் சமூக நீதிப் போராட்டங்களைப் போற்றும் தமிழக அரசு, அவருக்கு முன்னதாகவே தமிழகத்தில் சமூக நீதிக்காகப் பாடுபட்ட தலைவர்களை மறந்தது ஏன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தருமபுரியில் பாஜக மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் இன்று (செப்.6) நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தருமபுரிக்கு வருகை தந்தார்.

கூட்ட முடிவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசும்போது, ”தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அண்மையில் திறக்கப்பட்ட பாரத மாதா நினைவாலயத்தின் பெயரை பாரத மாதா ஆலயம் அல்லது திருக்கோயில் என ஒரு மாதத்துக்குள் மாற்ற வேண்டும். இல்லையெனில் பாஜக பெரும் போராட்டம் நடத்தும்.

பெரியார் பிறந்த தினத்தை தமிழக அரசு சமூக நீதி நாளாக அறிவித்துள்ளது. இதை பாஜக வரவேற்கிறது. அதேநேரம், பெரியாருக்கு முன்னதாகவே தமிழகத்தில் சமூக நீதிக்காகப் பாடுபட்ட, போராடிய பாரதியார், வஉசி உள்ளிட்ட தலைவர்களை திமுக மறந்துவிட்டது. திமுக தொடங்கிய பின்னர் செயல்பட்ட தலைவர்கள் மட்டுமே அக்கட்சிக்குத் தெரிகிறது.

அனைத்துத் தலைவர்கள் குறித்தும் இளைய தலைமுறை அறிந்துகொள்ளும் வகையில் அரசு செயல்பட வேண்டும். காவிரியில் மேகேதாட்டு பகுதியில் கர்நாடகா அரசு புதிய அணை கட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக பாஜகவின் நிலைப்பாடு அப்படியே தொடர்கிறது” என்று அண்ணாமலை தெரிவித்தார்.