உலகின் சில பகுதிகளில் கரோனாவின் வெவ்வேறுபட்ட உருமாறிய வடிவங்கள் கண்டறியப்படுவதால், மேலும் புதிய உருமாறிய வடிவங்கள் பரவக்கூடுமோ என்ற அச்சம் இன்னும் நீடித்துவரும் நிலையில், இந்தியாவில் ஏப்ரல் 10-ல் தொடங்கப்பட்டிருக்கும் மூன்றாவது தவணைத் தடுப்பூசிக்கான திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. மூன்றாவது தவணையால் சார்ஸ் வகை தொற்றுப் பரவலுக்கு எதிராக வாழ்நாள் முழுவதுமான பாதுகாப்பை அளிக்க முடியுமா என்று கேள்விகள் தொடர்ந்தபோதிலும், மூன்றாவது தவணை போடப்பட்ட நாடுகளில், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து தீவிரமான தொற்றுப் பரவலுக்கான வாய்ப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது.

எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ‘பூஸ்டர்’ எனப்படும் தடுப்பூசியின் மூன்றாவது தவணையை முன்னெச்சரிக்கையாகப் போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய ஒரு முடிவு. மத்திய அரசின் இந்த முடிவையடுத்து, சீரம் நிறுவனமும் பாரத் பயோடெக் நிறுவனமும் தங்களது தடுப்பூசித் தவணைகளுக்கான விலையை ரூ.225 ஆகக் குறைத்துள்ளன. முன்பு இந்தத் தடுப்பூசித் தவணைகளின் விலை முறையே ரூ.600 ஆகவும் ரூ.1,200 ஆகவும் இருந்தன. தடுப்பூசித் தவணைகளின் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் தனியார் மருத்துவ நிலையங்கள் தங்களது சேவைக்கான கட்டணமாக ரூ.150 வசூலிக்கும்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டாலும், கடந்த சில நாட்களில் அதைப் போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இரண்டாவது தவணைத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 9 மாதங்களுக்குப் பிறகுதான் மூன்றாவது தவணையைப் போட்டுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தக் கால அவகாசத்தைக் குறைத்தால், மூன்றாவது தவணைக்காகக் காத்திருப்போர் முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும்.

மத்திய அரசு வகுத்துள்ள முன்னெச்சரிக்கை தடுப்பூசிக் கொள்கையின் முக்கியக் குறையாகச் சுட்டிக்காட்டப்படுவது, 60 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் தனியார் மருத்துவ நிலையங்களில் மட்டும்தான் போட்டுக்கொள்ள முடியும் என்பது. நிரந்தரப் பணியில்லாத உழைக்கும் மக்களுக்கு இந்தத் தடுப்பூசியின் விலை ஒரு சுமையாக மாறிவிடக்கூடும் என்றும் அதன் காரணமாக அவர்கள் தடுப்பூசியைத் தவிர்க்கக்கூடும் என்றும் சில பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறான ஒரு பார்வையையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜனவரியில் முன்களப் பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தவணைத் தடுப்பூசியைப் பரிந்துரைத்தபோது, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவ நிலையங்கள் இரண்டிலுமே அதைப் போட்டுக்கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. தற்போதும் அப்படியொரு நெகிழ்வான கொள்கையைப் பின்பற்றுவதே சரியாக இருக்கும். வாய்ப்புள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

பொருளாதார நிலையில் நலிவுற்றவர்கள் அதற்கான சான்றுகளுடன் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். வசதியற்ற ஏழை மக்கள் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள இயலாதபட்சத்தில், அது பொருளாதார வசதி பெற்றவர்களுக்கு மட்டுமேயானதாக மாறிவிடக்கூடும். பெருந்தொற்றுக்கு எதிரான, முழுமையான தடுப்பூசிப் பாதுகாப்பு என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கட்டும்.