ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை, விளையாட்டு வீரர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் வீரர்களை வாழ்த்தினார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றால் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
விளையாட்டு வீரர்களுக்குத் தடுப்பூசி முகாமை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் ஒருங்கிணைந்து விழாவை நடத்தியது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
”தமிழகத்தின் முதல்வராக மட்டுமின்றி விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட உங்களில் ஒருவனாக, உங்களுடைய முன்னேற்றத்திற்கு, உங்களுடைய வெற்றிக்கு உதவிட நான் என்றென்றும் தயாராக இருக்கிறேன். கரோனா போன்ற தொற்று உங்களைப் போன்ற விளையாட்டு வீரர்களின் சாதனைக்கும், உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக இங்கே தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் இல்லத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரை ஒரு அணி ரன் எடுத்தும் வெற்றி பெறலாம், எதிர் அணியினர் ரன் எடுப்பதைத் தடுத்தும் வெற்றி பெறலாம். ஒரு அணி கோல் அடித்தும் வெற்றி பெறலாம், எதிர் அணி கோல் அடிப்பதைத் தடுத்தும் வெற்றி பெறலாம்.
இந்த கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் முதற்கட்டமாக அத்தகைய தடுப்பாட்டத்தை ஆடுவதுபோல் தடுப்பூசி முகாம் இங்கு நடக்கிறது. இந்தச் சிறப்பு முகாமை அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயன்படுத்தி உங்கள் உடல் நலத்தைப் பேணிப் பாதுகாத்து விளையாட்டுக் களத்தில் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரா புகன், வருண் ஏ.தக்கர், கே.சி.கணபதி பாய்மர படகுப் போட்டியிலும், சத்தியன் மற்றும் சரத் கமல் ஆகியோர் டேபிள் டென்னிஸ் போட்டியிலும், பவானி தேவி வாள் சண்டைப் போட்டியிலும், மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக்கில் மாரியப்பனும் கலந்துகொள்கிறார்கள். இவர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.
உலக அரங்கில் விளையாடவிருக்கிற நம் வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டிய கடமை இந்த அரசுக்கு உள்ளது. எனவே ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் தமிழக வீரருக்கு ரூ.3 கோடியும், வெள்ளிப்பதக்கம் வெல்பவருக்கு ரூ.2 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்லும் வீரருக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும் என்பதைத் தமிழக அரசின் சார்பில் இப்பரிசுத்தொகையை அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழக வீரர்களே சென்று வருக. தரணியை வென்று வருக”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.