தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பாகப் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நேர்காணல் நடத்த உள்ளதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தேமுதிக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது. அந்தக் கூட்டணி தற்போதும் தொடர்வதாக, இரு கட்சிகளின் தரப்பிலும் கூறப்பட்டு வந்தது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, தங்களை இன்னும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், தமிழகத்திற்கு ஏப். 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு மட்டும் 23 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, பிப். 27 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், தொகுதிகள் எண்ணிக்கை குறித்து, அதிமுக சார்பில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர், விஜயகாந்தை நேற்று முன்தினம் (பிப். 27) சந்தித்துப் பேசினர். பின்னர், தேமுதிக நிர்வாகிகள், நேற்று (பிப். 28) அமைச்சர்கள் இருவரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், தொகுதி எண்ணிக்கையில் இழுபறி நீடிக்கிறது.
அதிமுக கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளதாக தேமுதிக அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தேமுதிக சார்பாகப் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடத்த உள்ளதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 1) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“நடைபெறவுள்ள 2021 தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்தவர்களிடம் தேமுதிக தலைமைக் கழகத்தில் நேர்காணல் 06.03.2021 முதல் 08.03.2021 வரை நடைபெறும்
முதல் நாள் நேர்காணலில் கலந்துகொள்ளும் மாவட்டங்கள்:
06.03.2021 – சனிக்கிழமை – காலை 10.35 மணிக்கு
1) கோவை
2) நீலகிரி
3) ஈரோடு
4) கன்னியாகுமரி
5) திருநெல்வேலி
6) ராமநாதபுரம்
7) தேனி
06.03.2021 – சனிக்கிழமை -பிற்பகல் 2 மணிக்கு
1) கரூர்
2) புதுக்கோட்டை
3) சிவகங்கை
4) நாகை
5) மயிலாடுதுறை
6) திருவாரூர்
7) கடலூர்
இரண்டாம் நாள் நேர்காணலில் கலந்துகொள்ளும் மாவட்டங்கள்:
07.03.2021 – ஞாயிற்றுகிழமை – காலை 9 மணிக்கு
1) தென்காசி
2) தூத்துக்குடி
3) விருதுநகர்
4) திருப்பூர்
5) நாமக்கல்
6) கள்ளக்குறிச்சி
07.03.2021 – ஞாயிற்றுகிழமை – பிற்பகல் 2 மணிக்கு
1) தஞ்சாவூர்
2) சேலம்
3) திருச்சி
4) கிருஷ்ணகிரி
5) திருப்பத்தூர்
6) வேலூர்
7) செங்கல்பட்டு
மூன்றாம் நாள் நேர்காணலில் கலந்துகொள்ளும் மாவட்டங்கள்:
08.03.2021 – திங்கள்கிழமை – காலை 9 மணிக்கு
1) மதுரை
2) திண்டுக்கல்
3) தருமபுரி
4) அரியலூர்
5) பெரம்பலூர்
6) விழுப்புரம்
08.03.2021 – திங்கள்கிழமை – பிற்பகல் 2 மணிக்கு
1) திருவண்ணாமலை
2) ராணிப்பேட்டை
3) திருவள்ளூர்
4) காஞ்சிபுரம்
5) சென்னை”.
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.