தன்னை கற்பழித்துக் கொன்றவர்களை நாயகி ஆவியாக வந்து பழிவாங்கும் கதையே ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் ஒரு வழியாக இன்று தான் வெளிச்சம் கண்டுள்ளது. இது ரொம்ப பழைய படமாச்சே என்று மனதளவில் தோன்ற வைக்காமல் இருந்ததே இந்தப் படத்தின் வெற்றி. வழக்கமான பழிவாங்கல் பேய்க் கதை என்றாலும் செல்வராகவன் டச் என்று அங்கங்கே தூவி விட்டுள்ளார். ஒவ்வொரு நடிகரிடமிருந்தும் இப்படியொரு கச்சிதமான நடிப்பை வாங்க செல்வராகவனால் மட்டுமே முடியும்.

அதே போல், காவல் நிலையத்தில் படமாக்கப்பட்டுள்ள பாடல் காட்சிகளும், அதைப் படமாக்கிய விதம், பாடல் வரிகள் என அனைத்திலுமே செல்வராகவன் டச். தெளிந்த நீரோடை போலப் போகும் கதையில் கடைசி 20 நிமிடங்கள் மட்டும் வேறு ஏதோ படத்தின் உணர்வைத் தருகிறது. அதை மட்டும் மாற்றி அமைத்திருக்கலாம்.

இந்தப் படம் முழுக்கவே எஸ்.ஜே.சூர்யாவின் ராஜ்ஜியம் தான். சைக்கோவாக தொடங்கி நடை, உடை, பேச்சு, வசன உச்சரிப்பு என மனிதர் விளையாடியிருக்கிறார். அவர் நாயகனாக நடித்த படங்களில் அற்புதமான நடிப்பைக் கொடுத்த படம் இது என்று சொல்லலாம். அதிலும் பல காட்சிகள் ஒரே டேக்கில் எடுத்திருப்பதை உணர முடிகிறது. ஒரு தவறு செய்துவிட்டுப் பம்முவது பின்பு வசனங்களால் அசரவைப்பது என வாழ்ந்திருக்கிறார். பல காட்சிகளில் சிவாஜி, மேஜர் சுந்தரராஜன் ஆகியோரின் வசன உச்சரிப்பை ஞாபகப்படுத்தி இருக்கிறார்.

நாயகிகளாக ரெஜினா மற்றும் நந்திதா. இருவருமே அவர்களுடைய கதாபாத்திரங்களை உணர்ந்து கனகச்சிதமாக நடித்துள்ளனர். தீவிர கடவுள் பக்தையாக இருப்பது, குழந்தையைக் கவனித்துக் கொள்வது, எஸ்.ஜே.சூர்யாவைப் பற்றித் தெரிந்து கொண்டு கோபப்படுவது, பேயாக ஆவேசப்படுவது என இருவரில் ரெஜினா ஸ்கோர் செய்கிறார். 2-ம் பாதியில் சில காட்சிகளில் நந்திதா ஸ்கோர் செய்துள்ளார்.

குழந்தை ரிஷி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுடன் இருக்கும் வேலைக்காரர்கள் 4 பேர் என கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான தேர்வு. படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு தான். பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டிற்குள் தான் என்றாலும், அரவிந்த் கிருஷ்ணா தனது ஒளிப்பதிவின் மூலம் பார்வையாளர்களைக் கதைக்குள் இழுத்துவிடுகிறார். பல்வேறு விளக்குகள் பயன்படுத்தி வழக்கமான பேய் படமாக அல்லாமல் வித்தியாசப்படுத்திக் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

யுவன் இசையில் பாடல்கள் அனைத்துமே சூப்பர். ஆனால், பின்னணி இசை பல இடங்களில் அட போட வைத்தாலும், சில இடங்களில் ஏன் இப்படி என்று கேட்க வைக்கிறது. செல்வராகவன் உருவாக்கியிருக்கும் உலகத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா – யுவன் இருவருமே உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். சின்ன கதையாக இருந்தாலும், மூவரின் கூட்டணியும் வித்தியாசப்படுத்தி பார்வையாளர்களைக் கட்டிப் போட்டுள்ளனர். பேய் படம் என்பதை எடுத்துவிட்டாலும், இது செல்வராகவன் படம் என்று தாராளமாகச் சொல்லலாம்.

படத்தின் கதையோட்டம் க்ளைமாக்ஸ் நெருங்கும் போது வழக்கமான பேய் படங்கள் மாதிரியான சண்டைக் காட்சிகள் எனக் கொஞ்சம் அதிகப்படுத்தி படமாக்கியிருப்பது தான் பிரச்சினை. அதுவரை செல்வராகவன் உருவாக்கியிருந்த உலகம் அத்தனையும் கடைசி 20 நிமிடக் காட்சிகள் மறக்கடிக்க வைத்துவிடுவது தான் மிகப்பெரிய பிரச்சினை.

அதே போல் ரெஜினா வீட்டிற்குள் வரும் போது காட்டப்படும் அமானுஷ்யம், பேய் இருக்கிற மாதிரியான சில காட்சிகள், வயதானவர் கதாபாத்திரம் மூலம் சொல்ல வருவது என்ன என்பதற்கும் படத்தில் பதில் இல்லை. அதே போல் படத்தின் கிராபிக்ஸ் படுமோசம். அதையும் சரியான முறையில் செய்திருக்கலாம்.

செல்வராகவன் படங்களின் ரசிகர்களுக்கு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ கண்டிப்பாக ஒரு ட்ரீட் தான். மற்றவர்களுக்குக் கடைசி 20 நிமிடம் சொதப்பலான படமாகத் தெரியலாம். அதையும் சரி செய்திருந்தால் கண்டிப்பாக அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த படமாக இருந்திருக்கும்.

1 COMMENT

  1. It¦s actually a cool and helpful piece of information. I am happy that you simply shared this useful info with us. Please stay us up to date like this. Thanks for sharing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here