வரலாற்றுப் பின்னணியில் தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வருகிறார் தியாகராஜன் குமாரராஜா.

’ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் தியாகராஜன் குமாரராஜா. ஆனால், அவருடைய கதை சொல்லும் விதம், காட்சியமைப்புகள், வசனங்கள் என அனைத்துக்குமே பெரும் ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

‘ஆரண்ய காண்டம்’ படத்துக்குப் பிறகு பல்வேறு முன்னணி நடிகர்கள் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்க விருப்பப்பட்டார்கள். அதிலும், சம்பளத்தைக் கூட குறைத்துக்கொள்ளத் தயாராக இருந்தார்கள். இப்போதும் கூட அவருடைய அடுத்த படத்தில் நடிப்பதற்குப் பல்வேறு நடிகர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

ஆனால், தியாகராஜன் குமாரராஜா ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் எடுத்துக்கொள்ளும் இடைவெளி என்பது மிகவும் அதிகம். தற்போது தனது அடுத்த படத்துக்கான கதை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார் தியாகராஜன் குமாரராஜா. இந்தக் கதை வரலாற்றுப் பின்னணி கொண்ட கதையாம்.

இந்தக் கதை எழுதி முடித்தவுடன், யாரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்யலாம் எனத் திட்டமிட்டுள்ளார் தியாகராஜன் குமாரராஜா. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதும் இன்னும் முடிவாகவில்லை.