அரபிக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாகவும் இது காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
விதர்பா முதல் தென் தமிழகம் வரை 0.9 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகி உள்ளதன் காரணமாக, குமரிக் கடல், தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 – 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40- 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதன் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுப்பெறக் கூடும். இதனால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.