சென்னை கடற்கரை – வேளச்சேரி தடத்தில் ஞாயிறுதோறும் கூடுதலாக 20 இணை ரயில்கள் அதிகரித்து இயக்கப்படுகின்றன. இதற்குபயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பயணிகளின் தேவைக்கு ஏற்ப ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், பொதுமக்கள் பயணம் செய்வதற்கான நேரக் கட்டுப்பாடு இருந்து வருகிறது.

சென்னை கடற்கரை – வேளச்சேரி தடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் 28 இணை ரயில்கள் இயக்கப்பட்டன. கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, 14-ம் தேதி (நேற்று) முதல் 20 இணை ரயில்கள் அதிகரித்து இயக்கப்படுகின்றன. எனவே, இனி அனைத்து ஞாயிறுகளிலும் மொத்தம் 48 இணை மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘சென்னை கடற்கரை – வேளச்சேரி தடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைவாகவே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. தற்போது கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

இதனால், பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்ய முடிகிறது. மேலும், பயணிகளுக்கு தற்போது உள்ள நேரக் கட்டுப்பாட்டை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.