பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை முதல்வரே நேரில் பெறுகிறார் என்ற தகவல் அறிந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் ஏராளமானோர் திரண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களிடம் மனுக்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் பெற்றுக் கொண்டார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு, மாவட்ட வாரியாக பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணும் விதமாக, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற துறை,தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின்பொறுப்பேற்றதும் உருவாக்கப்பட்டது. அத்துறையின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டு, மனுக்கள் பிரிக்கப்பட்டு தற்போது பயனாளிகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர, தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதல்வர் தனிப்பிரிவும் சீரமைக்கப்பட்டது. cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தமிழ், ஆங்கிலத்தில் கோரிக்கை மனுக்கள், புகார்களைஅளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, மனு மீதானநடவடிக்கைகளை கைபேசி குறுந்தகவலாகவும், இணையதளம் வாயிலாகவும் அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் சாய்ராம், தனக்கு குடியிருக்க வீடு வேண்டும் என்றுமுதல்வர் தனிப் பிரிவில் மனு அளிக்க, அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, குறைந்த வாடகையில் அவருக்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டதுடன், ரூ.5 லட்சம் நிதியும் முதல்வரால்நேரில் வழங்கப்பட்டது. இது மக்கள்மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், தற்போதுமக்கள் தினமும் நீண்ட வரிசையில்நின்று முதல்வர் தனிப் பிரிவில் மனுக்களை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முதல்வரே நேரில் தனிப் பிரிவு மனுக்களை பெறுகிறார் என்று தகவல்வெளியானது. இதனால், தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப் பிரிவில் நேற்று காலை முதலே பொதுமக்கள் அதிக அளவில் மனுக்களுடன் குவிந்தனர். தலைமைச் செயலகத்தின் பிரதான வாசலையும் தாண்டி இந்த வரிசை நீண்டு சென்றது.
நேற்று காலை தலைமைச் செயலகம் வந்த முதல்வர், முதலில் மனுக்களை பெறுவதாக இருந்தது. ஆனால், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நேரம் ஆனதால், முதல்வர் நேரடியாக கூட்டத்துக்கு சென்றுவிட்டார். இதனால், முதல்வரிடம் நேரில் மனுக்களை கொடுக்க காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து, முதல்வர் தனிப் பிரிவில் மனுக்களை அளித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்து பிற்பகல் 1 மணி அளவில் வந்த முதல்வர் ஸ்டாலின், முதல்வர் தனிப் பிரிவு அலுவலகத்துக்கு வெளியே மக்கள் காத்திருந்த பகுதிக்கு வந்து, அங்கு இருந்தவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். முதல்வரே நேரில் மனுக்களை வாங்கிக் கொண்டதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.