சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் கனகலட்சுமி. அண்மையில் தனியார் நிறுவன ஃபைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி அறிமுகமான நபர், குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
பின்னர், கடன் பெற்றுத்தர முன்பணமாக ரூ.82 ஆயிரத்தை வங்கிக் கணக்கு மூலம் பெற்றுள்ளார். ஆனால், உறுதி அளித்தபடி கடன் பெற்றுத் தரவில்லை. மேலும் கமிஷனாக பெற்ற பணத்தையும் திரும்பத் தரவில்லை
இதனால் அதிர்ச்சியடைந்த கனகலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், மோசடியில் ஈடுபட்டது டெல்லியைச் சேர்ந்த கும்பல் என்பது தெரிந்தது. இதையடுத்து டெல்லி விரைந்த தனிப் படை போலீஸார், டெல்லி ஜனக்புரியில் போலி கால்சென்டர் நடத்தி வந்த அசோக்குமார், அவரது மனைவி காமாட்சி, அவர்களுக்கு உடந்தையாக இருந்த ராஜ்வேல், அபிஷேக்பால் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கைது செய்யப்பட்ட கும்பல் பஜாஜ் ஃபைனான்ஸ், வரலட்சுமி ஃபைனான்ஸ் மற்றும் தமிழர் ஃபைனான்ஸ் என வெவ்வேறு பெயர்களில் தொடர்புகொண்டு, கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
தெருவோரம் வசிப்பவர்கள், நிரந்தர முகவரி இல்லாதவர்கள் ஆகியோரிடமிருந்து ரூ.500 முதல் ரூ.20 ஆயிரம் வரை கொடுத்து, அவர்களது பெயரில் சிம் கார்டுகள் மற்றும் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, அதை உபயோகித்து, தங்களது பெயர் வெளியில் வராமல் நூதன முறையில் மோசடி செய்து வந்துள்ளனர்” என்றனர்.
“தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வசிக்கும் அப்பாவி மக்கள் பலரிடம் இந்தக் கும்பல் கைவரிசை காட்டியுள்ளது எனவே, முகம் தெரியாத, அறிமுகம் இல்லாதவர்கள் செல்போனில் தொடர்புகொண்டு, கடன் பெற்றுத் தருவதாகக் கூறினால் அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்” என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.