‘பேமலி மேன்’ இணையத்தொடரின் மூலம் புகழ்பெற்ற ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர், ‘ஃபார்ஸி’. கள்ளநோட்டு அச்சடிக்கும் ஷாகித் கபூர் கோஷ்டியை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ராஷி கண்ணா, ரெஜினா, கே.கே.மேனன், அமோல் பலேகர் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசும்போது, “இங்கே, வெப் தொடரில் நான் அறிமுகமாவதாகச் சொன்னார்கள். 2010ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானேன். இதுவரை 55 படங்கள் நடித்திருக்கிறேன். அதனால் அறிமுகம் என்று சொல்ல முடியாது. குறும்படமோ, திரைப்படமோ எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரே உழைப்பைத்தான் கொடுக்கிறேன். இந்த வாய்ப்பு வந்தபோது மொழி எனக்கு பிரச்சனையில்லை எனத் தெரியவந்தது. துபாயில் இருந்தபோது இந்தி பேசக் கற்றுக்கொண்டது உதவியது. இந்தக் குழுவுடன் பணியாற்றியது சிறந்த அனுபவம். இதில் தமிழராகவே நடித்திருக்கிறேன். ஆனால், தொடரில் சில இடங்களில் தமிழ்ப் பேசுகிறேன். நேரமில்லை என்பதால் இதில் நான் டப்பிங் பேச முடியவில்லை. அதற்காக இந்தக் குழுவிடம் மன்னிப்புக் கேட்டேன்” என்றார். இந்த தொடர் அமேசான் பிரைம் தளத்தில் பிப்.10ம் தேதி வெளியாகிறது.