2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வகள் டிசம்பர் 26 முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

26.12.2022 (திங்கள்கிழமை) காலை 10.00 மணி முதல் 03.01.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 5.00 மணி வரை (31.12.2022 (சனிக் கிழமை) மற்றும் 01.01.2023 (ஞாயிற்றுக் கிழமை) நீங்கலாக மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று இணைய வழியில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

10ஆம் வகுப்பு: முதன்முறையாக நேரடித் தனித் தேர்வாகப் பத்தாம் வகுப்பு தேர்வை எழுத விரும்புவோரும்; 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களும் வரும் ஆண்டில் நடைபெற இருக்கும் தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்புத் பொதுத் தேர்வை பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்வில் புதிய பாடத்திட்டத்தில் மட்டுமே தேர்வெழுத முடியும்.

தேர்வுக் கட்டணம்: ரூ. 125; இணையவழி பதிவு கட்டணம்: ரூ. 50

மொத்தம்: ரூ. 175

11ஆம் வகுப்பு: 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டு இடைவெளியுடன் இருக்கும் மாணவர்கள் 11ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்புக்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் வாயிலாக பெற்ற சான்றிதழை கண்டிப்பாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

11ஆம் வகுப்புத் பொதுத் தேர்வை பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்வில் புதிய பாடத்திட்டத்தில் மட்டுமே தேர்வெழுத முடியும்.

தேர்வுக் கட்டணம்: ரூ. 150; இதரக் கட்டணம்: ரூ. 35; இணையவழி பதிவுக் கட்டணம்: ரூ. 50

மொத்த கட்டணம்: ரூ.235

12ஆம் வகுப்பு: ஏற்கெனவே நேரடித் தனித்தேர்வராக 11ஆம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து வருகை புரியாத / தேர்ச்சி பெற்ற / பெறாத தேர்வர்கள், தற்போது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஆண்டு முதன்முறையாக நேரடி தனித்தேர்வராக 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது 11ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத பாடங்களை எழுத விண்ணப்பிக்கும்போது, அத்துடன் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களையும் எழுத விண்ணப்பிக்க வேண்டும்.

12ஆம் வகுப்புத் பொதுத் தேர்வை பழைய பாடத்திட்டத்தில் அல்லது பழைய நடைமுறையில் (ஒவ்வொரு பாடத்துக்கும் 200 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு)தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்வில் புதிய பாடத்திட்டத்தில், புதிய நடைமுறையில் மட்டுமே தேர்வு எழுத முடியும்.

தேர்வுக் கட்டணம்: ரூ. 150 ; இதரக் கட்டணம்: ரூ. 35 ; இணையவழி பதிவுக் கட்டணம்: ரூ. 50

மொத்தக் கட்டணம்: ரூ. 235

ஏற்கெனவே 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் 50 ரூபாய் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

புதிய பாடத்திட்டம்:

10,11,12ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் குறித்த விரிவான விவரங்களை www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

சிறப்பு அனுமதித் திட்டம்:

குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் 05.01.2023 (வியாழக்கிழமை) முதல் 07.01.2023 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்புத் தேர்வுக்கு சிறப்பு அனுமதிக் கட்டணம் – ரூ.500, 11ஆம் வகுப்பு- 12ஆம் வகுப்புத் தேர்வுகளுக்கான சிறப்பு அனுமதிக் கட்டணம் – ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்:

இணைய வழியில் விண்ணப்பத்தைப் பதிவுசெய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு (Registration Slip) வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக் கூட அனுமதிச்சீட்டுகளை (Admission Certificate) பதிவிறக்கம் செய்ய முடியும். எனவே, ஒப்புகைச் சீட்டைத் தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்குத் தேர்வு எழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டப் பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தேர்வுத்துறை அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இத்தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.