அமெரிக்க வாழ் தமிழ் அமைப்புகளிடம் இருந்து மருத்துவ சேவைக்காக நிதி திரட்டி, தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வழங்க தமிழ்நாடு அறக்கட்டளை (அமெரிக்கா) ஏற்பாடு செய்துள்ளது. முதல்கட்டமாக ரூ.8.76 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, 2-ம்கட்டமாக 6 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1.11 கோடியில் உபகரணங்கள் வழங்கும் விழா சென்னை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா கலந்துகொண்டனர்.
இதில், சேலம், சென்னை, செய்யாறு, மதுராந்தகம், உத்திரமேரூர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கான மருத்துவ உபகரணங்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம், அறக்கட்டளைத் தலைவர் எஸ்.ராஜரத்தினம், தலைமை செயல் அலுவலர் இளங்கோ உள்ளிட்டோர் வழங்கினர். இதுவரை ரூ.9.87 கோடி மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சேவைப் பணிக்கு, இந்திய ஸ்போரா, ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர் சங்கம், வடஅமெரிக்கா தமிழ்ச் சங்கம் கூட்டமைப்பு, அமெரிக்கா தொழில்முனைவோர் சங்கம், அமெரிக்க தமிழ் மருத்துவச் சங்கம் ஆகிய அமைப்புகள் நிதியுதவி வழங்கியுள்ளன.