இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 9-வது முறையாக இங்கிலாந்து லெக் ஸ்பின்னர் அதில் ரிஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
புனேவில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 22-வது ஓவரை ரஷித் வீசினார். களத்தில் 79 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்த நிலையில் ஆடிய கோலி, விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ரஷித் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழப்பது இது 9-வது முறையாகும். சர்வதேச கிரிக்கெட்டில் கோலியை அதிகமாக அதாவது 10 முறை நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அடுத்தாற்போல், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸனும், இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்துவீச்சளர் கிரேம் ஸ்வான் இருவரும் 8 முறை கோலியை ஆட்டமிழக்கச் செய்துள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்கூட கோலியை 2 முறை அதில் ரஷித்தான் ஆட்டமிழக்கச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக கோலி பலவீனமான வீரர் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
கிரிக்கெட்டில் 3-வது வீரராகக் களமிறங்கி 10 ஆயிரம் ரன்களைச் சேர்த்து கோலி புதிய வரலாறு படைத்துள்ளார். ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்தாற்போல், 3-வது நிலையில் களமிறங்கி 10 ஆயிரம் ரன்களைச் சேர்த்த 2-வது வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். இந்திய அணி அளவில் கோலிதான் முதல் வீரர் ஆவார். தன்னுடைய 190-வது இன்னிங்ஸில் கோலி 10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார்.
3-வது இடத்தில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா (9,747 ரன்கள்), அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஜேக்ஸ் காலிஸ் (7,774) உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கேப்டனாக இருந்து அதிகமான ரன்கள் அடித்த வரிசையில் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்தை முந்தியுள்ளார் விராட் கோலி.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து 5,414 ரன்கள் குவித்துள்ளார். தற்போது விராட் கோலி 93 ஒருநாள் போட்டிகளில் 5,376 ரன்கள் குவித்திருந்தார். ஸ்மித்தின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 41 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட நிலையில், இன்று அந்த மைல்கல்லை எட்டினார்.