காரைக்கால் கீழ காசாக்குடிமேட்டைச் சேர்ந்த வைத்தியநாதனின் விசைப்படகில் கடலுக்குச் சென்ற கீழ காசாக்குடியைச் சேர்ந்தஇளையராஜா ( 33), கணேசன் (48), பிரேம்குமார் (25), ராமன்(31), தர்மசாமி (48), மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வீரா (28), தினேஷ் (28), ராமநாதன் (37), ஜெகதீஷ்வரன் (27), விக்னேஷ்(22), சதீஷ்குமார் (23), பாக்கியராஜ் (23) ஆகிய 12 மீனவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் நீதிபதி கிசாந்த் பொன்னுத்துரை முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனைஅடிப்படையில் 12 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவர்களின் விசைப்படகு மற்றும் வலைகளை இலங்கை வெளிநாட்டு மீன்பிடிதடைச்சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
இதையடுத்து மீனவர்கள் 12பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ளஇந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.