புதுடெல்லி: மாநிலங்களவையில் 16 எம்.பி. பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 எம்பி, பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று மத்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதில் 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 16 எம்.பி. பதவிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இதன்படி ராஜாஸ்தானில் 4 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. இதில் 2 எம்பி பதவிகளை ஆளும் காங்கிரஸ் கைப்பற்றும் என்றும், ஒரு எம்பி பதவியை பாஜக பெறும் என்றும் தெரிகிறது. மீதமுள்ள ஒரு எம்பி பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

மகராஷ்டிராவில் 6 எம்பி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக 2, சிவசேனா ஒரு எம்பி பதவியை எளிதாக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள 3 எம்பி பதவிகளுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 4 எம்பி பதவிகளில் ஆளும் பாஜக 2, காங்கிரஸ் ஒரு இடத்தை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு எம்பி பதவிக்கு போட்டி ஏற்பட்டிருக்கிறது.

ஹரியாணாவின் 2 எம்பி பதவிகளில் எதிர்கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்தைப் பெறும் என்று தெரிகிறது. ஒரு எம்பி பதவிக்கு ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.