2 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்ஸின் கரோனா தடுப்பு மருந்தை செலுத்தி 2-வது மற்றும் 3-வது கிளினிக்கல் பரிசோதனை நடத்திக்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பரிசோதனைகள் டெல்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ், நாக்பூர் எம்ஐஎம்சி மருத்துவமனை உள்ளிட்ட 525 இடங்களில் நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்ஸின், கோவிஷீல்ட் மருந்துகள் மட்டுமே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு மருந்துகளும் 18- வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் செலுத்தப்பட்டு வருகிறது. 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்தப்படவில்லை.
முதல்முறையாக 2 வயதுமுதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்ஸின் மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது. இந்த நிறுவனம் 2-வது கட்டம் மற்றும் 3-வது கட்ட கிளிக்கல் பரிசோதனைகளை நடத்திக்கொள்ள மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாடு அமைப்பின் வல்லுநர் குழு அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) வட்டாரங்கள் கூறுகையில் “ விரிவான ஆலோசனைகள், ஆய்வுகளுக்குப்பின், 2 வயது முதல் 18 வயதுவரை உள்ள பிரிவினருக்கு 2-வது மற்றும் 3-வது கிளினிக்கல் பரிசோதனைகளை நடத்திக்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு வல்லுநர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளது. 3-வது கிளினிக்கல் பரிசோதனைக்குச் செல்லும் முன் 2-வது கிளினிக்கல் பரிசோதனை அறி்க்கையை வழங்கிட வேண்டும்” எனத் தெரிவிக்கின்றன.
கோவாக்ஸின் தடுப்பு மருந்து ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் தற்போது பைஸர் மருந்து நிறுவனம் 12 முதல் 15 வயதுள்ள பிரிவினருக்கு மருந்தைச் செலுத்திப் பரிசோதிக்க அமெரிக்கா அனுமதித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.