காரியாபட்டி: தமிழகம் முழுவதும் சுங்கத்துறையால் கைப்பற்றப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், அ.முக்குளம் அருகே உண்டுறுமி கிடாக்குளம் பகுதியில் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் ஆலை உள்ளது. இங்கு போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சுங்கத்துறை சார்பில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பத்ம விருதுபெற்ற மதுரை சின்னப்பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் திருச்சி சுங்கத்துறை சார்பில் கைப்பற்றப்பட்ட 300 கிலோ கொக்கைன் பவுடர், 160 கிலோ டெர்மிட்டால் போதை மாத்திரை உள்பட தமிழகம் முழுவதும் கைப்பற்றப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் மருத்துவக்கழிவுகள் இயந்திரத்தில் வைத்து எரித்து அழிக்கப்பட்டன.

இதுகுறித்து திருச்சி சுங்கத்துறை முதன்மை ஆணையாளர் உமாசங்கர் கூறுகையில், ‘‘போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பிடிபட்ட போதைப்பொருள் 42 ஆயிரம் கிலோ ஆங்காங்கே அழிக்கப்பட்டு வருகிறது. திருச்சி சுங்கத்துறை மூலம் பிடிபட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைபொருள்கள் தற்போது மருத்துவக்கழிவு ஆலையில் வைத்து அழிக்கப்பட்டது’’ என்றார்.முன்னதாக, போதை பொருள் அழிப்பு நிகழ்ச்சியை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். திருச்சி சுங்கத்துறை ஆணையாளர் அனில், துணை ஆணையாளர் திலீபன், ஒன்றிய வருவாய் புலனாய்வுத்துறை துணை ஆணையாளர் திருநாவுக்கரசு உட்பட பல்வேறு அதிகாரிகள் முன்னிலையில் எரிக்கப்பட்டது.