கும்பகோணம்: கும்பகோணத்தில் 4-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த 4 வயது சிறுமி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெசன்ட் சாலையைச் சேர்ந்தவர் ராஜா(42). நகை பாலிஷ் போடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி.

இவர்களின் குழந்தைகள் கோபிகா(4), கேசவ்(3). ராஜா, நேற்று முன்தினம் கும்பகோணம் பச்சையப்பன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடியில் வசித்து வரும் தனது சகோதரியின் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.

அப்போது, சிறுமி கோபிகா வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தார். இதில், எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கிரில் கம்பிகளின் இடைவெளி வழியாக கோபிகா தவறி கீழே விழுந்தார்.

இதில், பலத்த காயமடைந்த சிறுமி கோபிகா மீட்கப்பட்டு, திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு கோபிகா உயிரிழந்தார். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.