தமிழகத்துக்கு 7.97 லட்சம் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு நேற்று அனுப்பியது.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 2 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுவதால், மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் சில தினங்களிலேயே தீர்ந்து விடுகின்றன. இதனால், தமிழகம் முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், புனேவில் இருந்து 5 லட்சத்து 81,270 கோவிஷீல்டு, ஹைதராபாத்தில் இருந்து 2 லட்சத்து 15,810 கோவாக்சின் என மொத்தம் 7 லட்சத்து 97,080 லட்சம் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு நேற்று வந்தன.
அவற்றை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு கொண்டு சென்ற சுகாதாரத் துறை அதிகாரிகள், தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.