நடப்பு ஐபிஎல் சீசனின் 13-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி ஐந்து பந்துகள் எஞ்சியிருக்க 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
அந்த அணி ஒரு கட்டத்தில் 87 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கிட்டத்தட்ட தோல்வியை தழுவிக் கொண்டிருந்த அணியை மீட்கும் பணியை மேற்கொண்டார் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக். நடப்பு ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக அவர் கடைசியாக விளையாடியது 2021 டிசம்பரில் நடந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில். தமிழ்நாடு அணிக்காக விளையாடிய அவர் அந்தத் தொடரில் 7 இன்னிங்ஸ் விளையாடி 376 ரன்கள் சேர்த்திருந்தார். ஒரு சதம், இரண்டு அரைசதம் அதில் அடங்கும்.
இப்போது பெங்களூரூ அணிக்காக அவர் மேட்ச் வின்னராக ஜொலித்து வருகிறார். இதுவரையில் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் நாட்-அவுட் பேட்ஸ்மேனாக இறுதிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார் அவர். ராஜஸ்தான் அணிக்கு எதிராக 23 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து அசத்தினார்.
பதற்றமான சூழலில் பதற்றமின்றி ஆட்டத்தை அவர் அணுகிய விதம் அனுபவத்தின் முதிர்ச்சி எனப் போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்த வர்ணனையாளர்கள் சொல்லி இருந்தனர். உள்ளூர் கிரிக்கெட்டில் கெத்து காட்டி வரும் தினேஷ் கார்த்திக், இடையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வர்ணனை செய்யும் பணியையும் கவனித்தார்.
கடந்த 2018 முதல் 2021 வரையில் கொல்கத்தா அணிக்காக அவர் விளையாடி இருந்தார். இருப்பினும் மெகா ஏலத்திற்கு முன்னதாக அவரை அந்த அணி தக்க வைக்கவில்லை. அந்த அணிக்காக கேப்டனாகவும் செயல்பட்டவர் தினேஷ் கார்த்திக். ஒருவேளை அந்த அணி அவரது வயதை கருதி தக்க வைக்க தயங்கி இருக்கலாம். ஆனால் 36 வயதான அவர் தனது அனுபவத்தை ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.
“கடந்த சீசனில் நான் இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும் என நினைத்தேன். அதனால் இந்த சீசனில் அப்படி இருக்கக் கூடாது என எண்ணி முயற்சிகளை முன்னெடுத்தேன். இந்த முறை சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு என்னை தயார்படுத்திக் கொண்டேன். எனது ஆட்டம் இன்னும் முடியவில்லை என்பதை எனக்கு நானே சொல்லிக் கொள்ளவே இதை செய்தேன். நான் கிரீஸுக்கு சென்ற போது ஓவருக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. இது மாதிரியான சூழலை கையாள நான் பயிற்சி எடுத்துக் கொண்டவன். அதனால் அதை வெற்றிகரமாக செய்து முடித்தேன்” என அற்புதமான ஆட்டத்திற்குப் பின்னர் சொல்லியிருந்தார் தினேஷ் கார்த்திக்.
அவரிடம் முடியாது என சொல்லவே கூடாது எனச் சொல்லி ட்வீட் செய்திருந்தார் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே.