அடுத்த தொழில்நுட்பப் புரட்சிக்கு தலைமையேற்க இந்தியா வழிகாட்டுகிறது, உலகின் வேகமாக வளரும் ஸ்டார்ட்அப் சூழலியலில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்கிறது, இந்தியா என்றால் வர்த்தகம் என்று பொருள்பட திகழச்செய்து வருகிறோம். என செமிகான் இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
செமிகான் இந்தியா மாநாடு 2022-ஐ காணொலி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தொடக்க விழாவில் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மத்திய அமைச்சர்கள், செமிகண்டக்டர் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
உலகளாவிய செமிகண்டக்டர் விநியோக சங்கிலியில் இந்தியாவை முக்கிய பங்குதாரர் நாடாக மாற்றுவதே நமது கூட்டு நோக்கம். உயர்- தொழில்நுட்ப, உயர்தர மற்றும் மிகுந்த நம்பத்தன்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் பணியாற்ற நாம் விரும்புகிறோம். செமிகண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த முதலீட்டை ஈர்க்கும் சிறந்த நாடாக இந்தியா திகழ்வதற்கான ஆறு காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, 1.3 பில்லியனுக்கு மேற்பட்ட இந்தியர்களை இணைப்பதற்கான டிஜிட்டல் கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. உள்ளார்ந்த நிதிசேவை, வங்கியியல் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை புரட்சியில் அண்மையில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் முக்கியமானது.
சுகாதாரம் மற்றும் குடும்பநலம் முதல் உள்ளடக்கிய மற்றும் அதிகாரம் அளித்தல் வரை அனைத்து வகையான ஆளுகையிலும் வாழ்க்கையை மாற்றியமைக்க நாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்.
இரண்டாவதாக, ஆறு லட்சம் (600 ஆயிரம்) கிராமங்களை, அகன்ற கற்றை முதலீட்டில் 5ஜி, ஐஓடி மற்றும் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பம் போன்றவை மூலம் அடுத்த தொழில்நுட்ப புரட்சிக்கு தலைமையேற்க இந்தியா வழிகாட்டுகிறது.
மூன்றாவதாக, உலகின் வேகமாக வளரும் ஸ்டார்ட்அப் சூழலியலில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்கிறது. இந்தியாவின் சொந்த செமிகண்டக்டர் பயன்பாடு 2026-ல் 80 பில்லியன் டாலரையும், 2030-ல் 110 பில்லியன் டாலரையும் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்காவதாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குவதை மேம்படுத்த விரிவான சீர்த்திருத்தங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது. 25,000-க்கும் மேற்பட்ட பழங்கால நடைமுறைகளை ஒழித்தது போன்ற நடவடிக்கைகள் முக்கியமானது. உரிமங்களை தானாக புதுப்பித்தல், வெளிப்படை தன்மை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வாயிலாக முறைப்படுத்தும் கட்டமைப்புகளை விரைவுபடுத்துதல் மற்றும் உலகிலேயே மிகவும் சாதகமான வரிகட்டமைப்புகளில் ஒன்றாக இந்தியாவை திகழச் செய்து வருகிறது.
ஐந்தாவதாக, திறன் மேம்பாட்டில் அதிக முதலீடு மற்றும் 21-ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. செமிகண்டக்டர் வடிவமைப்பு திறன்மிகுந்தவர்கள் நம்மிடையே பெருமளவில் உள்ளனர், இது உலகளவிலான செமிகண்டக்டர் வடிவமைப்பு பொறியாளர்களில் 20% ஆகும். ஏறத்தாழ முதல் 25 செமிகண்டக்டர் வடிவமைப்பு நிறுவனங்கள், அவற்றின் சொந்த வடிவமைப்பு அல்லது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை நம்நாட்டில் கொண்டுள்ளன.
ஆறாவதாக, இந்திய உற்பத்தித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. நூற்றாண்டில் ஒருமுறை ஏற்படக்கூடிய பெருந்தொற்று பாதிப்பை மனிதகுலம் எதிர்கொண்டு வரும் வேளையில் நமது மக்களின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது.
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் 14 முக்கிய துறைகளில் 26 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஊக்கத் தொகையை வழங்கி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், மின்னணு பொருட்கள் உற்பத்தித் துறை வரலாறு காணாத வளர்ச்சி அடையும். 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான மொத்த மதிப்பீட்டில் செமி- கான் இந்தியா திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
செமி கண்டக்டர் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சூழலை விளக்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். அரசின் உதவி தேவைப்படுவதால் வர்த்தகத்திற்கு உகந்த சூழலை வழங்குவதற்காக சிறந்த முயற்சிகளை அரசு மேற்கொள்ளும். தொழில்துறை கடினமாக பாடுபட்டால், அரசு அதைவிட மேலும் கடினமாக பாடுபடும்.
புதிய உலக நடைமுறை உருவாகி வருகிறது. புதிதாக உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்க கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். தொழில்நுட்பம் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஆதரவு கொள்கை சூழல் வாயிலாக இயன்ற அளவுக்கு முரண்பாடுகளை உங்களுக்கு சாதகமாக்கி வருகிறோம். இந்தியா என்றால் வர்த்தகம் என்று பொருள்பட திகழச்செய்து வருகிறோம்.