தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் இன்று (மே 31) பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவது இல்லை என்று சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 வீதம் குறைத்தது. இதனால் பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைந்தது. ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 என 12 சிலிண்டர்களுக்கு பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள் 9 கோடி பேருக்கு மானியம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. முன்னதாக, கடந்த ஆண்டு நவ.3-ம் தேதி மக்களுக்கு தீபாவளி பரிசளிக்கும் விதமாக, பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.5, டீசல் மீதான கலால் வரியை ரூ.10 குறைத்து மத்திய அரசு அறிவித்தது.
இரண்டு முறையுமே பல்வேறு மாநிலங்கள், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வாறாக மத்திய அரசு அடிக்கடி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதால் சில்லறை வர்த்தகத்தில் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறும் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் இன்று ஒரு நாள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. இதில் தமிழகம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 22 மாநில பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில் மட்டுமே 5 ,800 பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை டீலர்கள் உள்ளனர். மத்திய அரசு கலால் வரியை குறைக்கும் போதெல்லாம், தங்களிடம் இருப்பு உள்ள பெட்ரோல், டீசலை நஷ்டத்திற்கு விற்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இது குறித்து பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலால் வரி குறைப்பால் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் வழங்க வேண்டும். இனி எதிர்காலத்தில் இதுபோன்ற விலை மாற்றங்கள் எல்லாமே திட்டமிட்ட நடைமுறை மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும். கலால் வரி உயர்த்தப்பட்டால் அதன் மூலம் பெட்ரோல், டீசல் டீலர்களால் எந்த லாபமும் பெற இயலாது. அப்படியிருக்க கலால் வரி குறைப்பால் ஏற்படும் நட்டத்தை மட்டும் சந்திக்கும்படி செய்வது நியாயமாகாது” என்று தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று (மே 31) ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.