மும்பை: ஏற்கெனவே சரிவு கண்டு வரும் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள், நேற்று வெளியான 4-வது காலாண்டு அறிக்கையில் நிகர லாபம் குறைந்துள்ளதால் இன்று மேலும் சரிவு கண்டது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பொதுபங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடங்கி மே.9 தேதி வரை நடைபெற்றது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டு பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன.
முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்ஐசி ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விலையைக் காட்டிலும் 8 சதவீதம் விலை குறைந்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஒரு பங்கு ரூ.867 என்ற அளவில் முதல் நாளில் விற்பனைக்கு வந்தது. அதன் பிறகு தொடர்ந்து எல்ஐசி பங்குகள் சரிவு கண்டே வந்தது. வெளியீட்டு விலையை தொடரவில்லை.
இந்தநிலையில் எல்ஐசி நிறுவனத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த நிதியாண்டின் வரவு செலவு விவரங்கள் வெளியிடப்பட்டன. இந்த முடிவுகள் எல்ஐசி பங்குகளுக்கு ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு இது நிறுவனத்தின் முதல் காலாண்டு அறிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் 2021-22 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் லாபம் குறைந்துள்ளது.
மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 17 சதவீதம் சரிந்து ரூ.2,409 கோடியாக இருந்தது. அதே சமயம் 2021ல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் ரூ.2,917.33 கோடியாக இருந்தது. எல்ஐசியின் நிகர லாபத்தில் 18 சதவீதம் என்ற பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் பிரீமியம் வருமானம் அதிகரித்துள்ளது.
மார்ச் 2022 காலாண்டு முடிவுகளில் இந்த வருமானம் ரூ.2,372 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் நிகர லாபம் ரூ.2,893 கோடியாக இருந்தது. இதனால் பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு பங்குக்கு 1.50 ரூபாய் ஈவுத்தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பெரிய அளவில் முதலீட்டாளர்களுக்கு ஈவுத் தொகையும் கிடைக்கவில்லை.
இதன் எதிரொலி இன்று காணப்பட்டது. எல்ஐசி பங்குகள் இன்று 3 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தையில் பங்கு 3.23 சதவீதம் சரிந்து ரூ.810 ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் எல்ஐசி பங்குகள் 3.31 சதவீதம் சரிந்து ரூ.810 ஆக வர்த்தகமானது.