புதுடெல்லி: தாஜ்மகால் மீது சர்ச்சையை கிளப்புபவர்கள் மீது ஆக்ரா காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதை முகலாயர்களின் வாரிசாகத் தன்னைக் கூறும் ஆரீப் யாக்கூப்புத்தீன் என்பவர் நேரில் அளித்துள்ளார்.

“கடந்த சில மாதங்களாக தாஜ்மகால் மீது பல்வேறு வகையிலான சர்ச்சைகள் கிளப்பி விடப்படுன்றன. கீழ்த்தரமானப் புகழ்ச்சி பெறுவதற்காக உலக அதிசயமான தாஜ்மகால் மீது புகார் செய்வதாகவும் கருதப்படுகிறது. இதுபோன்றவர்கள் மீது உத்தரப் பிரதேசப் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறி ஆக்ரா காவல்நிலையத்தில் இன்று புகார் செய்யப்பட்டுள்ளது. இதை தன்னை முகலாயர்களின் கடைசி வாரிசாகக் கூறிக்கொள்ளும் ஆரீப் யாக்கூப்புத்தீன் அளித்துள்ளார்.

இதில், அயோத்தி மடத்துறவியான பரமஹன்ஸ் ஆச்சார்யா, பாஜகவின் செய்தித்தொடர்பாளர் ரஜ்னீஷ்சிங் மற்றும் மத்ஸ்யேந்தர கோஸ்வாமி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மதநல்லிணக்கத்தை குலைக்க முயல்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் நகல், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, தேஜோலாயா எனும் சிவன் கோயிலை இடித்து தாஜ்மகாலை முகலாய மன்னர் ஷாஜகான் கட்டியதாகப் புகார் கூறப்படுகிறது. இந்துத்துவாவினர் கூறும் இப்புகாரில் தாஜ்மகாலினுள் இந்துக் கடவுள்களின் சிலைகள் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். இதன் மீது அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ அமர்வில் தொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தன்னை கடைசி முலாய மன்னரான பகதூர் ஜபர் ஷாவின் கொள்ளுப்பேரனாகக் கூறிக் கொள்கிறார் ஆரீப் யாக்கூப்புத்தீன். இவர் இதற்கு முன் தன்னை பாபர் மசூதியின் முத்தவல்லியாக அமர்த்தும்படியும் உத்தரப் பிரதேச சன்னி மத்திய வஃக்பு வாரியத்திடம் வலியுறுத்தி இருந்தது நினைவுகூரத்தக்கது.