சென்னை: தமிழகத்தில் தேர்வு எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது 9-ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இறுதித் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை என்றும், இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கரோனா தாக்கம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி தேர்ச்சியளிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.