சென்னையில் வெள்ளத் தடுப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்தப் பணிகள் அனைத்தும் செப்டம்பர் 30ம் தேதிக்கு நிறைவு பெறுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அனைத்து மண்டல அதிகாரிகள், செயற்பொறியாளர்கள் மற்றும் அனைத்து மண்டல கண்காணிப்பு பொறியாளர் ஆகியோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வடகிழக்கு பருவமழை வரவுள்ளதால், முக்கிய பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். சாலைகளில் தண்ணீர் தேங்கினால் உதவி செயற்பொறியாளர், நிர்வாகப் பொறியாளர் ஆகியோர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
கடந்த முறை வடகிழக்கு பருவமழை காலத்தில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. அந்தப் பகுதிகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து இந்த முறை வெள்ளம் ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டும். சிங்கார சென்னை முதல் கட்டம், இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மாநில அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியது. குறிப்பாக தேனாம்பேட்டை, புளியந்தோப்பு, கோடம்பாக்கம் ஆகியவை இந்த இரண்டு கட்ட பணிகளில் வருகிறது. இந்தப் பகுதிகளில் பணிபுரிவதற்கான உத்தரவு ஏப்ரலில் அளிக்கப்பட்டது. தற்போது 50 முதல் 60 சதவீதம் வரை சாலைகளில் பணி செய்யப்பட்டு வருகிறது. கழிவுநீர் லைன்கள் மற்றும் எலெக்ட்ரிக்கல் கேபிள்களில் சேதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.