புதுடெல்லி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், மேகாலயா மாநிலங்களுக்கு ஒரே நாளில் சுமார் 96 டன் அளவிலான நிவாரண பொருட்கள் விமானப்படை விமானங்கள் மூலம் வழங்கப்பட்டன.
அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் பெய்த தொடர் கனமழையால் சுமார் 33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 4 நாட்களாக விமானப்படை மூலம் குடிநீர், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 96 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் விமானப்படை விமானங்கள் மூலம் அசாம், மேகாலயா மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன.
பேரிடர் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவியாக 25-ம் தேதியன்று ஒரே நாளில் அசாம், மேகாலயா மாநிலங்களுக்கு 96 டன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதாக ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த 21-ம் தேதி முதல் 4 நாட்களில் சுமார் 203 டன் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்த 253 பேர் விமானப்படை மூலம் மீட்கப்பட்டனர். சி-130, ஏஎன்-32 ரக விமானங்களும் எம்ஐ 17வி5, எம்ஐ 171 வி ரக ஹெலிகாப்டர்களும் வெள்ள நிவாரண மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.