ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அனந்தநாக் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலை அடுத்து, இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் போலீசும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த தேடுதல் வேட்டையின்போது, ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்தார். காஷ்மீர் பிராந்திய காவல்துறை நேற்று இதனை தெரிவித்தது. மேலும், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அது அறிவித்தது.
இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற மோதலில், மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் பிராந்திய காவல்துறை அறிவித்துள்ளது. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக இன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ராணுவமும் ஜம்மு காஷ்மீர் போலீசாரும் இணைந்து நடத்திய தாக்குதலில், 4 தீவிரவாதிகள் கடந்த வாரம் கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தின் டார்ச் என்ற பகுதியில் பதுங்கி இருந்த 3 தீவிரவாதிகள் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்ததாக தெரிவித்த போலீசார், மூலு என்ற இடத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இவர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்தனர். இந்த மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.