நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் 1,035 மீட்டர் நீளத்தில் இந்தியாவின் மிகப் பெரிய கடல் நீரை உள்கொண்ரும் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலியில் செயல்பட்டுவரும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள், 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பேரூரில் அமையவுள்ள 400 மில்லியன் உற்பத்தித் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பூர்வாங்கப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
நெம்மேலியில் ரூபாய் 1,516 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நாள்ளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் உள்ளது. கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதில், கடல்நீரை நிலையத்துக்கு உள்கொணரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர் நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய் (Offshore works; Intake and Outfall Pipeline works), கடல் நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Seawater Intake Sump) காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி (Dissolved Air Flotation), வடிகட்டப்பட்ட கடல் நீர்த்தேக்கத் தொட்டி (Clarified Water Tank), வடிகட்டப்பட்ட கடல்நீர் உந்து நிலையம் (Clarified Water Pumping Station) ஆகியவற்றை சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
குறிப்பாக, இந்த திட்டத்தில், கடல்சார் பணிகளின் ஒரு பகுதியாக, 2250 மிமீ விட்டமுள்ள 1,035 மீட்டர் நீளமுள்ள கடல் நீரை உள்கொணரும் குழாயில், 835 மீட்டர் நீளத்துக்கு குழாய் கடலில் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மேலும் மீதமுள்ள 200 மீட்டர் நீளத்திற்கு கடல்நீரை உட்கொள்ளும் குழாய் பதிக்கும் பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இக்குழாய் ஜூன் மாதம் இறுதிக்குள் கடலில் பதிக்கப்படும்.
இதுவே இந்தியாவின் மிகப்பெரிய கடல்நீரை உட்கொள்ளும் குழாய் ஆகும் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீர் வெளியேற்றும் 1600 மிமீ விட்டமுள்ள 636 மீட்டர் நீளமுள்ள குழாயில் 600 மீட்டர் நீளத்திற்கு குழாய் கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையத்திலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு, 48.10 கி.மீ நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.