“ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறு இல்லை. ஆனால் அதை அரசியலாக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது” என்று குடிமைப் பணித் தேர்வர்களுடன் உடனான கலந்துரையாடலில் மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார்.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், ‘எண்ணித் துணிக’ எனும் தலைப்பில், இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 150 பேருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ஆளுநர், “ஒரு திறமை வாய்ந்த குடிமைப் பணி அதிகாரி, எந்தவொரு விஷயத்தையும் உண்மையின் அடிப்படையில் அணுக வேண்டும். முன்கூட்டியே தீர்மானம் செய்யாமலும், சமூக செயற்பாட்டாளர் போல சிந்திக்காமலும் இருக்க வேண்டும்.

உங்களது முடிவுகளானது மக்கள் நேரடியாகவும், எளிமையாகவும் அணுகும் வகையில் இருக்க வேண்டும். அதுபோன்ற மனநிலையுடன் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும். அரசின் சட்டங்களை எப்போதும் விமர்சனம் செய்யக் கூடாது. எந்தச் சட்டமும் நூறு சதவீதம் முழுமையானது அல்ல என்பது உண்மை. மேலும், ஒரு விஷயத்தை பிரபலமானவர் கூறுவதால் அது உண்மையாகிவிடாது.

‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பதில் தவறு இல்லை. ஆனால், அதை அரசியலாக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது. தனி நாகாலாந்து கேட்கும் நாகா குழுக்களின் எண்ணம் என்பது நாகா இனத்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணம் இல்லை” என்று பதிலளித்தார்.

முன்னதாக, அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘தமிழ்நாடு’ என்று அழைப்பதைவிட ‘தமிழகம்’ என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையானது. மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே தமிழக அரசு கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.