டி20 கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஆல்-ரவுண்டர் பிராவோ. ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் அவர்.

38 வயதான அவர் டி20 கிரிக்கெட்டில் கடந்த 2006 முதல் விளையாடி வருகிறார். உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் சுமார் 25-க்கும் மேற்பட்ட அணிகளில் அவர் விளையாடி உள்ளார். இத்தகைய சூழலில்தான் இந்த வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

தனது 545-வது டி20 போட்டியில் 600-வது விக்கெட்டை அவர் கைப்பற்றியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 78 விக்கெட்டுகளும், உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீகில் விளையாடி 522 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். ஓவல் அணிக்கு எதிரான போட்டியில் ரிலீ ரோசோவ் விக்கெட்டை LBW முறையில் கைப்பற்றினார் பிராவோ. அதுதான் அவரது 600-வது டி20 விக்கெட்.

டி20 கிரிக்கெட்டில் அவரை தவிர வேறு எந்தவொரு பவுலரும் 500 விக்கெட் என்ற மைல்கல்லை கூட இன்னும் தொடவில்லை. அவருக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் 466 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ள பவுலராக ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் உள்ளார்.