டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஹாக்கிப் பிரிவில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியிடம் தோல்வி அடைந்தது.
டோக்கியோவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 2-5 என்ற கோல்கணக்கில் தோற்கடித்தது நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணி.
41 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பதக்கம் இல்லாமல் சென்றுவரும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளியை கைப்பற்றும் என எதிர்பாரக்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே கிடைத்துள்ளது. இருப்பினும் 3வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டால் வெண்கல் பதக்கத்தை வெல்ல முடியும்.
இன்று நடக்கும் ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியுடன் இந்திய அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் மோதும்.
ஆட்டத்தி்ன் 3-வது கால்பகுதி நேரம் வரை ஆட்டம் யாருக்கு சாதகமாகச்செல்லும் என்ற பரபரப்புடனே ஆட்டம் நகர்ந்தது. முதல் கால்பகுதிநேரத்தில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்திய அணியினர் அதன்பின் அந்த முன்னிலையை தக்கவைக்க தவறினர். 2-வது கால்பகுதியில் இரு அணிகளும் சமநிலை அடைந்தபின், 3-வது கால்பகுதியில் பெல்ஜியம் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து கோல் அடிக்க விடாமல் இந்திய வீரர்கள் தடுத்தனர். ஆனால், கடைசி மற்றும் 4-வது கால்பகுதி நேரத்தில்தான் ஆட்டம் தலைகீழாக மாறி, பெல்ஜியம் அணி 3 கோல்களை அடித்து ஆட்டத்தை திருப்பினர்.
இந்திய அணி சார்பில் 7-வது நிமிடத்தில் ஹர்மன்பிரித் சிங், மன்தீப் சிங்கும் கோல் அடித்தனர். பெல்ஜியம் சார்பில் லூயிக் லூபெர்ட், அலெக்சான்டர் ஹென்ட்ரிக்ஸ் 3(53,49 19 நிமிடம்) கோல்கள், டோமென் 60-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் லூபார்ட் கோல் அடித்து அணியை முன்னிைலப்படுத்தினார். அதற்கு பதிலடியாக 7-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரில் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்து சமன் செய்தார். இரு அணிகளும் சமநிலையில் இருத்ததால் ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது. இந்திய வீரர் மன்தீப் சிங் 2-வது கோல் அடிக்க இந்திய அணி 2-1 என்று முன்னிலை பெற்றது.
முதல்கால்பகுதி நேர முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
2-வது கால்பகுதி நேரம்தொடங்கிய சிறிதுநேரத்தில் 19-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ஹென்ட்ரிக்ஸ் கோல் அடித்து 2-2 என்ற கணக்கில் சமன் செய்தார். அதன்பின் இந்திய அணியினரும், பெல்ஜியம் வீரர்களும் கோல் அடிக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து, 2-வது கால்பகுதியில் இரு அணியினரும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தனர்.
3-வது கால்பகுதி நேரத்திலும் இரு அணியினரும் கோல் அடிக்க, மாறி, மாறி முயன்றனர். ஆனால், பெல்ஜியம் அணியினரின் முயற்சியை இந்திய வீரர்கள் தடுத்தனர், அதேபோல இந்திய வீரர்களின் முயற்சியை பெல்ஜியம் வீரர்கள் தடுத்தனர். இதனால் 3-வது கால்பகுதி நேரத்திலும் எந்த கோலும் இரு அணி வீரர்களும் அடிக்கவில்லை.
4-வது கால்பகுதி நேரத்தில் பெல்ஜியம் வீரர்கள் அதிரடியாக கோல் மழை பொழிந்தனர். 49-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் அலெக்சான்டர் ஹென்ட்ரி்க்ஸ் தனது 2-வது கோலையும், அணிக்கு 3-வது கோலையும் அடித்தார்.
53-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னரை அந்த அணி வீரர் அலெக்சான்டர் ஹென்ட்ரி்க்ஸ் கோலாக்கி தனது ஹாட்ரிக் கோல் அடித்தார். 59-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ஜான்ஜான் டோமென் கோல் அடிக்க பெல்ஜியம் அணி 5-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்ட நேர முடிவில் இந்திய அணியை 2-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.