ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி உள்ள அதானி குழுமம், கடந்தாண்டில் நாளொன்றுக்கு ரூ.1002 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக ஐஐஎஃப்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐஐஎஃப்எல் நிறுவனம் 2020-2021-ம் ஆண்டுக்கான இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.7.18 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முகேஷ் அம்பானி குடும்பம் முதல் இடம் பிடித்துள்ளது. முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து ஒரு நாளைக்கு ரூ.163 கோடி உயர்ந்துள்ளது. தற்போது, இவர்களின் குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.7 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக உள்ளது.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் மிக வேகமான வளர்ச்சியை பெற்றவர்களில் அதானி நிறுவனத்தின் தலைவர் கவுதம் அதானி (59) இடம் பெற்றுள்ளார். இவரும், இவருடைய குடும்பத்தினரும் சார்ந்த தொழில் நிறுவனங்களின் சொத்து மதிப்பு, 2020- 2021ம் ஆண்டில் 5.05 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, கடந்தாண்டில் இவர்களின் நிறுவனம் ஒவ்வொரு நாளும் ரூ.1002 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இதன்மூலம், நாட்டின் 2வது பெரிய பணக்கார குடும்பம் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர். இந்த சொத்து வளர்ச்சியின் மூலம், சீனாவை சேர்ந்த பாட்டில் தண்ணீர் தயாரிப்பாளர் சாங் ஷன்ஷனை பின்னுக்கு தள்ளி, ஆசியாவின் 2வது பணக்காரர் என்ற பெருமையையும் அதானி பெற்றுள்ளார்.
2019ம் ஆண்டில் 1.40 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த அதானி, 2 இடங்கள் முன்னேறி 2வது இடத்துக்கு வந்துள்ளார். எச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் சிவநாடாரின் குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்தாண்டில் 67 சதவீதம் உயர்ந்து, ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 600 கோடியாகி இருக்கிறது. கடந்தாண்டில் இவரின் குடும்பம் தினமும் 260 கோடி ஈட்டியுள்ளது.