திருநாகேஸ்வரம் கடைத்தெருவில் இரவு முழுவதும் அனுமதியின்றி பார் செயல்படுவதால் பெண்கள் அவ்வழியாகச் செல்லமுடியவில்லை என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா தலைமை வகித்தார். நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் டி. இளங்கோவன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியது: “திருநாகேஸ்வரம் கடைத்தெருவிலுள்ள 2 டாஸ்மாக் கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள் என அனைவரும் வேதனைக்குள்ளாகின்றனர். மேலும் இரவு முழுவதும் அனுமதியின்றி பார் செயல்படுவதால் இரவு நேரங்களில் பெண்கள் அவ்வழியாகச் செல்லமுடியவில்லை. அக்கடைகளை உடனே அகற்ற வேண்டும்.
இதே பகுதியிலுள்ள நவீன அரசி ஆலையின் எதிர்புறம் வாய்க்கால் கரைகளிலிருந்து 121 பனை மரங்களை 2021-ம் ஆண்டு மே 25- ந்தேதி அனுமதியின்றி ஒருவர் வெட்டி எடுத்துச் சென்றது குறித்து புகாரளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தேப்பெருமாநல்லூர் வாய்க்காலில் ஷட்டர் அமைக்கும் பணி தொடங்கி ஓராண்டும் ஆகியும், பணிகள் முடிக்கப்படாமல் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை, உடனடியாக முடிக்க வேண்டும்.
புராதானமான கல்லணை – பூம்புகார் சாலை, பாபுராஜபுரத்தின் குறுக்கே போடப்பட்ட நான்கு வழிச்சாலையில் 5 அடி அகலத்திற்கு அவசரக்கால வாகனம் செல்லும் வகையில் பாதை விட வேண்டும், மருத்துவக்குடியில் ஆக்கிரமிப்பிலுள்ள 2 ஏக்கர் நிலத்தை மீட்டு, நெல் கிடங்கு மற்றும் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு தொடக்க வேளாண்மை வங்கியில் யூரியா போன்ற உரங்களை 2 பாட்டில்கள் வாங்கினால் தான் உரம் வழங்குவேன் என்பவர்கள் மற்றும் விலை பட்டியல் வைக்காத தனியார் உரம் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடிச்சம்பாடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மின்மோட்டாரை நம்பி கோடை சாகுபடி செய்துள்ளோம்.
அதனால் இச்சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். இதே பகுதியில் மின்மோட்டாருக்கு செல்லும் செம்பு ஒயர்களை மர்ம நபர்கள் 5-க்கும் மேற்பட்ட மின் மோட்டாரிலிருந்து திருடிச் சென்றது குறித்து புகாரளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்கும் சுவாமிமலை போலீஸார் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும்.
வட்டார மருத்துவ அலுவலகத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் உரிய நேரத்தில் வருவது குறித்து கண்காணிக்க வேண்டும், குமரன்குடி கிராமத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலர் காலதாமதமாக வருவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தவறும் பட்சத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும். 3-ம் கட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணியினை பழைய அளவீட்டின் படி சாலையை அமைக்க வேண்டும்” என தெரிவித்தனர். பின்னர், கோரிக்கையை மனுவாக அவரிடம் வழங்கினர்.
இதற்கு பதிலளித்த கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா கூறியது, “விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் அந்தந்த துறைக்கு அனுப்பி வைத்து, அடுத்த முறை கூட்டம் நடைபெறும் போது, பதிலளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.