புதுச்சேரி முதல்வரை யார் தவறாக பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது என்று அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ கோலப்பள்ளி சீனிவாச அசோக், முதல்வர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் அக்கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கோலப்பள்ளி சீனிவாச அசோக் மீது போலீஸ் டிஜிபியிடமும் புகார் அளித்துள்ளனர். அதிமுக மற்றும் சில அமைப்புகளும் ஏனாம் எம்எல்ஏவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “ஏனாம் தொகுதி எம்எல்ஏ கோலப்பள்ளி சீனிவாச அசோக், முதல்வரை பற்றி தவறாக விமர்சனம் செய்ததாக காவல் துறையில் எம்எல்ஏக்கள் புகார் அளித்துள்ளனர். இவ்விகாரம் தொடர்பாக பல்வேறு இடங்களில் கசப்பான சம்பவங்கள் நடைபெற்றன.

முதல்வரைப் பற்றி யார் தவறாக பேசினாலும் அது கண்டிக்கத்தக்கதாகும். இது தொடர்பாக ஏனாம் எம்எல்ஏவிடம் கேட்டபோது, முதல்வரை விமர்சித்து பேசவில்லை என கூறியுள்ளார். தெலுங்கில் தான் பேசியதை திரித்து கூறியுள்ளதாக தெரிவித்தார். முதல்வரை அவர் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளதாகவும், ஏனாம் தொகுதி மக்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றி தந்தால் அவரை மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் மக்கள் வரவேற்பார்கள் என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிப்பதாகவும் கோலப்பள்ளி சீனிவாச அசோக் எம்எல்ஏ கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வரிடமும், பொதுப் பணித்துறை அமைச்சரிடமும் கலந்து ஆலோசித்துள்ளேன். பொதுப்பணித் துறை அமைச்சர் புதுச்சேரி வந்தவுடன் கலந்தாலோசிக்கப்படும்.

இதேபோல் கோலப்பள்ளி சீனிவாச அசோக் எம்எல்ஏ புதுச்சேரி வந்தவுடன் இந்த விவகாரம் குறித்து கேட்டு முடிவு செய்யப்படும். இது சம்பந்தமாக என்னிடம் எந்த புகாரும் வரவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம் தலைமையில் புகார் அளிக்க வேண்டும் என்று என்னிடம் வந்து கேட்டார்கள். முகாந்திரம் இருந்தால் புகார் கொடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தேன்.

கோலபள்ளி சீனிவாச அசோக் எம்எல்ஏ முன்வைத்த 15 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். மற்ற கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் தெரிவித்தார்.