“நான் தவறிழைக்காதபோது, மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. அண்ணாமலை தவறு செய்துவிட்டதாக பத்திரிகையாளர்கள் கருதினால், என்னைப் புறக்கணிக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. நான் தவறு செய்யவில்லை, அதனால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
கடலூரில் பாஜக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களிடம் “குரங்குகளைப் போல் ஏன் எங்கு சென்றாலும் தாவித்தாவி வருகிறீர்கள்” என்று பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்குச் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அங்கு வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கடலூரில் பத்திரிகையாளர்கள் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என சில பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், “பத்திரிகையாளர்களை மரியாதையாக, நேர்மையாக, நியாயமாக 99 சதவீதம் நடத்துகின்றவன். எங்களுக்கு நியாயமான கோபம், சில பத்திரிகையாளர்களிடம் இருக்கிறது. காரணம், அவர்கள் தவறான செய்திகளை பதிவிடுகின்றனர். எனவே, நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன்.
நான் எப்போதும் தவறு செய்யவில்லை. மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. என் ரத்தத்தில் அது கிடையாது. தவறு செய்யாதபோது நான் எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். அதன்பிறகு, எனது செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதும், கலந்துகொள்ளாமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.
நான் தவறிழைக்காதபோது, மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. அண்ணாமலை தவறு செய்துவிட்டதாக நீங்கள் கருதினால், என்னைப் புறக்கணிக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. நான் தவறு செய்யவில்லை, அதனால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” என்று அவர் கூறினார்.