விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாலை அல்லது நாளை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் எனத் தெரிகிறது.
’தர்பார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார். இதில் நயன்தாரா நாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இவர்களுடன் முக்கியக் கதாபாத்திரங்களில் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன், சதீஷ், சூரி நடிக்கிறார்கள். அண்ணாத்த படத்தில் வில்லனாக நடிப்பவர் ஜெகபதி பாபு. படத்திற்கு இசை டி.இமான்.
சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த தயாராகிறது. அண்ணன் – தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக்குழு.
அண்ணாத்த படத்தில் ஒரு சில பேட்ச் வொர்க்குகள் மீதமுள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. அதே நேரத்தில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இப்போது, இணையத்தில் பரவி வரும் சமீபத்திய தகவல் என்னவென்றால், ரஜினிகாந்தின் ‘அண்ணாத்தே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வர உள்ளதாம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாலை அல்லது நாளை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தயாரிப்பாளர்கள் இன்னும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவில்லை. எனவே விநாயகர் சதுர்த்திக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு விட்டு, அடுத்து வரும் பண்டிகைகளுக்கு டீசர் மற்றும் டிரெய்லரை வெளியிட்டு, படத்தின் ப்ரொமோஷன் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. ‘அண்ணாத்தே’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது, படம் தீபாவளி தினமான நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.