அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையிலும் உங்களால் சேமிக்க முடியும்.இந்த திட்டத்தில் கடன் பெறும் வசதியும் உங்களுக்கு உண்டு

மாத சம்பள ஊழியர்கள் பிபிஎஃப் கணக்கைத் துவங்கி சேமித்தால் எவ்வளவு லாபம் பெறலாம் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

தபால் அலுவலகத்தில் இருக்கும் சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களில் மிகவும் முக்கியமானது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (பிபிஎஃப்) இந்த திட்டத்தில் சேமிப்பது எண்ணற்ற லாபத்தை தரகூடியது. அதிலும் குறிப்பாக மாத சம்பளம் வாங்குபவர்கள் ஓய்வூதிய வசதியின் அடிப்படையில் லாபத்தை அதிகம் பார்க்கலாம். அமைப்புசாரா துறையில் பணியாளராக இருப்பவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து ஓய்வு காலத்தில் நிரந்தரமான வருவாயை பெற்றிடுங்கள். இந்த திட்டத்தில் வரிச்சலுகையும் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு. இந்த திட்டத்தில் சேமிக்க நினைப்பவர்கள் குறைந்தபட்சம் ரூ.500 முதலே சேமிப்பை தொடங்கலாம். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையிலும் உங்களால் சேமிக்க முடியும்.

இந்த திட்டத்தில் வட்டி விவரங்களை பார்க்கலாம். இந்த பிபிஎஃப் திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி 7.1 % ஆகும். நீங்கள் வங்கியில் தொடரும் சேமிப்பு கணக்கு, பிக்சட் டெபாசிட் கணக்கை காட்டிலும் இந்த வட்டி அதிகம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15ஆண்டுகள் ஆகும்.உங்களால் கால அளவு முடிந்தபின்பு அதை நீட்டிக்க முடியாது. இந்த திட்டத்தில் கடன் பெறும் வசதியும் உங்களுக்கு உண்டு.பிபிஎஃப் கணக்கைத் துவங்கிய 3வது ஆண்டிலிருந்து கடன் பெறலாம்.

இந்த பிபிஎஃப் திட்டத்தில் கடன் பெற்றால் அதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 2 % நிர்ணியிக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி மற்றும் முழு பாதுகாப்பு பெற்ற இந்த பிபிஎஃப் திட்டத்தை அஞ்சல் அலுவலகம் தவிர சில பொதுத்துறை வங்கிகளிலும் உங்களால் தொடங்க முடியும். வங்கிகளில் தொடங்கினாலும் இந்த சேமிப்பு திட்டத்திற்கே அதே வட்டி மற்றும் சலுகைகள் வழங்கபடுகின்றன. எஸ்பிஐ போன்ற பொதுத்துறை வங்கியில் தற்போது இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. கூடுதல் விவரங்கள் பிபிஎஃப் என ஆன்லைனில் தேடி பார்க்கவும். அல்லது அஞ்சல் அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்து வரலாம்.