தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியில்முதன்முறையாக சங்க காலபாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வுப் பணிகள் கடந்த அக்டோபரில் தொடங்கி 7 மாத காலமாக நடந்து வருகிறது. அகழாய்வுக்காக 9 இடங்களில் 32 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து 60-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், மண் குடுவைகள், பானைகள், இரும்பு பொருட்கள், மணிகள் உள்ளிட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.

மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் ஆதிச்சநல்லூர் வந்து அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டார். ஆய்வாளர்களிடம் ஆய்வுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வுப் பணியில் முதல் முறையாக சங்க காலத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர்களின் 2 நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்களில் ஒரு தொட்டியில் கடல் ஆமைகள் இருப்பது போலவும், மரம், யானை, மீன்கள் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் ஆதிச்ச நல்லூரில் சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததையும், கடல் சார் வாணிபம் நடந்ததையும் உறுதிப்படுத்தும் விதமாக உள்ளன” என்றார்.

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதற்கான பணிகளும் அங்கு நடந்து வருகின்றன.