சென்னை: அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்-நடத்துநர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு செயல்படுத்தப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னை, தமிழக அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் வருகை பதிவு பயோமெட்ரிக் கருவி மூலம் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்படுகிறது. தொழில்நுட்ப பணியாளர்கள் காலை 8 மணிக்கும், நிர்வாகப் பணியாளர்கள் காலை 10 மணிக்கும் பணிக்கு வரும் போது வருகை பதிவு செய்ய வேண்டும்.

மாலை பணிமுடிந்து செல்லும்போதும் பயோமெட்ரிக் கருவி மூலம் பதிவு செய்துவிட்டு செல்லவேண்டும். ஓட்டுனர், நடத்துநர், பேருந்து தடத்தில் செல்வதற்கு பணிமனை வாயிலிருந்து புறப்படும் பொழுது சோதனை முறையில் பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் வருகை பதிவு செய்ய வேண்டும். பேஸ்புக் அடிப்படையில் பயோமெட்ரிக் சிஸ்டம் வருகைப் பதிவு முறை மேம்படுத்தப்படும். போக்குவரத்துத் துறையில் புதிதாக பணியாளர்கள் பணிமனையில் சேர்ந்தாலும் அவர்களுடைய பெயரையும் உடனடியாக பயோமெட்ரிக் முறை வருகை பதிவில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.