புதுடெல்லி: கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 ராஜ்ய சபா எம்பி பதவிக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஒன்றிய அமைச்சர்கள்  பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் போன்றோரின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு 10ம் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர், பஞ்சாப், தெலங்கானா, ஜார்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் 41 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அந்தந்த மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் வாக்குப்பதிவு மையங்களில் முகாமிட்டு, தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இன்று மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு முடிவடைந்ததும், மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. இன்று இரவு 7 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். ஒன்றிய பாஜக அமைச்சர்கள்  பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரமோத்  திவாரி, ரந்தீப் சுர்ஜேவாலா, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் போன்ற  தலைவர்களின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்பட உள்ளது.

மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் கடைசி இடத்தை பிடிக்க சிவசேனா கூட்டணியும், பாஜவும் தீவிரமாக களம் இறங்கி உள்ளன.
கர்நாடகாவில் 4 இடங்களுக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு பாஜ சார்பில் 3 பேர், காங்கிரஸ் சார்பில் 2 பேர், மஜத சார்பில்  ஒருவர் போட்டியிடுகின்றனர். ராஜஸ்தானில் 4 இடங்களுக்கு 5 பேர் போட்டியிடுகின்றனர். கடைசி இடத்துக்கு பாஜ ஆதரவு பெற்ற டிவி அதிபரும், காங்கிரஸ் வேட்பாளரும் மோதுகின்றனர்.

அரியானாவில் 2 இடங்களுக்கு 3 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்காளிக்காமல் இருக்க 4 மாநிலங்களிலும் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு ஓட்டுப்போட்டு வருகின்றனர். கட்சி மாறி வாக்களித்தார்களா? என்பது மாலையில் வாக்கு எண்ணிக்கைக்கு பின்பு தெரியவரும்.

அரியானா, மகாராஷ்டிராவில் குழப்பம்
* அரியானாவில் இரண்டு இடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக ஒரு இடத்தில் வெற்றிபெற்று விடும். மற்றொரு இடத்திற்கு சுயேச்சை வேட்பாளராக கார்த்திகேய சர்மா என்பவரை பாஜக களம் இறக்கியுள்ளது. இதனால் காங்கிரஸ் அஜய் மக்கானின் வெற்றிவாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எம்எல்ஏ இமான் என்பவரின் வாக்கை  பொருத்தே, அஜய் மக்கானின் வெற்றி வாய்ப்பு தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுகிறது. குதிரை பேரத்துக்கு பயந்து காங்கிரஸ் தனது 28 எம்எல்ஏக்களையும், பாஜக தனது 47 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்திருந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூர் ரிசார்ட்டில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் இன்று காலை சண்டிகருக்கு புறப்பட்டு சென்றனர்.

* மகாராஷ்டிராவில் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் ஆளும் மகா விகாஸ் அகாதிக்கு (எம்விஏ) வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக, ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, ஒவைசி கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள், காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் பிரதாப்காரிக்கு வாக்களிக்க உள்ளனர்.

* மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கெர் அலண்டி எம்எல்ஏ திலிப் மோஹிதே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் எம்எல்ஏ அன்னா பன்சோட் ஆகியோர் இன்றைய வாக்குப்பதிவில் பங்கேற்கவில்லை. இதற்கு, முதல்வர் உத்தவ் தாக்கரே மீது திலீப் மோஹிதே கோபமாக இருப்பதும், அன்னா பன்சோட் உடல்நலக்குறைவாக இருப்பதும் காரணம் என்றும் கூறப்படுகிறது. இருந்தும், மேற்கண்ட இருவரும் இன்று மதியம் மும்பை வந்தடைவார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.